13
அக்
08

கடைசி மழைத்துளி..

***

அகதி முகாம்
மழையில் வருகிறது

மண் மணம்.

 

***

அவசரக் காற்று
முதல் மழை
புளியம் பூக்கள்.

 

***


மழைவிட்ட நேரம்
தேங்கிய நீரில்
முகம் பார்த்தது
தெருவிளக்கு.


***


விற்பனையில்
வண்ணத்துப் பூச்சி
துடிக்கிறது பூச்செடி.


***


தாய்க்காகக் காத்திருக்கிறேன்
மரத்தில் சாய்ந்தபடி.

 

***


இறந்த வீரன்
மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது
பாதி எழுதிய மடல்.

 

***

விடிந்துவிடு இரவே
விழித்திருக்கிறான்
கூர்க்கா.

 

***

வாழ்த்து அட்டை
முகவரியில் வருடினேன்
எழுதிய கையை.

 

***


எப்படிப் பாதுகாக்க
குடைக் கம்பியில்
உன் கைரேகை.

 

***

தொட்ட நினைவு
புரட்டிய பக்கத்தில்
கூந்தல் முடி.

 

***


பாவம் தூண்டில்காரன்
தக்கையின் மீது
தும்பி.

 

***


மரக்கிளையில் குழந்தை
வரப்பில் பண்ணையார்
பயிரில் சிந்துகிறது பால்.

 

***


வாழ்க்கை என்னடா வாழ்க்கை
கருவேலங் காட்டிற்குள்
வண்ணத்துப் பூச்சி!


***


எவன் நிலம்!
எவன் நாடு!
இலவச மனைப் பட்டா!

 

***


நந்தனைக் கொன்றதே சரி
குலதெய்வம் மறந்த
குற்றவாளி.

 

***


நொறுக்குவான் பண்ணையாரை
எல்லாக் கோபங்களோடும்
சுடுகாட்டில்.

 

***

பிணப் பரிசோதனை
அய்யர் குடலிலும்
மலம்.


***


தேவர் படித்துறை
பறையர் படித்துறை
அலைகள் மீறின
சாதி!


***


பறையர் சுடுகாடு
படையாட்சி சுடுகாடு
தலைமுழுக
ஒரே ஆறு.

 

***


ஊருக்கு ஊர் வட்டிக்கடை
பொது இடங்களில்
தண்ணீர்த் தொட்டி
காறித்துப்புகிறான்
கணைக்கால் இரும்பொறை.

 

***


குருட்டுப் பாடகன்
தொடர்வண்டி சக்கரத்தில்
நசுங்கியது
புல்லாங்குழல்.

 

***


அன்று அதனை அடித்தாள்
இன்று அதுவாகி வெடித்தாள்
தாய் வழிச் சமூகம்.

 

***


ஒரே தலையணை
வெண்சுருட்டுப்
புகைக்குள்
திணறும்
மல்லிகை மணம்.

 

***


இரண்டு அடி கொடுத்தால்தான்
திருந்துவாய்!
வாங்கிக்கொள்
வள்ளுவனிடம்.

 

***


எங்கு தூங்குகிறதோ
என் கால்சட்டை காலத்தின்
குத்துப்படாத பம்பரம்.

 

***


கல்லூரி மணிக்கூண்டு
பழைய மாணவன்
விசாரிக்கும் மணியோசை.

 

***


ஒரு மரத்தை வெட்டுபவன்
மழையைக்
கொலை செய்கிறான்

 

***


கண்ணில் ஓவியம்
காதில் இசை
மழைப் பாட்டு

 

***


இந்தியா டுடேயில்
தமிழச்சி மார்புகள்!
கண்ணீரால் போர்த்தினேன்.

 

***


இரண்டு ஊதுபத்தி
புகையின் அசைவில்
நீ… நான்

 

***


உளி எடுத்துச்
சிற்பம் செதுக்கியவன்,
மூங்கில் அறுத்துப்
புல்லாங்குழல் செய்தவன்,
ஒலை கிழித்துக்
கவிதை எழுதியவன்..
இவர்களுக்கும்
பங்குண்டு
மழைக் கொலையில்.

ஒவ்வொரு செடிக்கும்
ஒவ்வொரு கொடிக்கும்
ஒவ்வொரு மரத்திற்கும்
பெயர்ச்சொல்லி,
உறவு சொல்லி
வாழ்ந்த வாழ்க்கை
வற்றிவிட்டது

26
மே
08

நீலம் – விமர்சனம்

 

arv4team.jpg

 2004 டிசம்பர் 26கடலோரத் தமிழர்களை கடல் விழுங்கிய நாள். சுனாமி என்னும் ஆழிப்பேரலை ஆயிரக்கணக்கான தமிழர்களை அடித்துச் சென்றது. அந்தச் சோகத்தை பலரும் அவரவர் மொழியில் பதிவு செய்துள்ளனர். கவிஞர் அறிவுமதி தம் திரைமொழியில் பதிவு செய்துள்ளார்.‘நீலம்’ என்னும் பெயரில் 10 நிமிடக் குறும்பட மாகத் தயாரித்துள்ளார். இப்படம் அண்மையில் பிரான்சு நாட்டில் பாரீசில் நடந்த ‘கேன்°’ உலகத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. நிகழ்காலப் பிரச்சினையைப் பேசிய படமாக உலக சினிமா வல்லுநர்களால் பார்க்கப்பட்டது; பாராட்டையும் பெற்றுள்ளது.

 “நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்றபோது என்னுடைய நண்பன் அறிவழகனின் குடும்பத்தில் ஒருவனாக வளர்ந்தேன். கடலூர் துறைமுகம் சோனாங்குப்பத்திலுள்ள அறிவழகனின் தந்தை சோ.சி. நடராசன் தாய் பருவதத் தம்மாள் ஆகியோர் என்னை ஒரு பிள்ளை யாகவே கருதி அன்பு செலுத்தினார்கள். சோனாங் குப்பம் எனது இரண்டாவது தாயூர் ஆனது.சோனாங்குப்பத்திற்கும் தேவனாம்பட்டினத்திற் கும் இடையில் உள்ள அந்தக் கடற்கரையின் அதிகாலைகளும் அந்திகளும் தான் என்னைக் கவிஞனாக்கியது. இந்தப்பகுதி ஆழிப்பேரலையால் தாக்கப்பட்டது அறிந்து துடித்தேன். உடனடியாக சென்னையிலிருந்து சென்று போய்ப் பார்த்தபோது உள்ளம் வலித்தது.

தமிழ்நாடு, ஈழம், அந்தமான் என தமிழர்கள் வாழும் பகுதிகளையே தேடித்தேடித் தாக்கியுள்ளதே என்ற வேதனை மனதிற்குள். இந்த வேதனையை, மனசின் வலியை கவிஞன் என்ற முறையில் 10 பாடல்களாக்கி வெளிப்படுத்தியுள்ளேன்.

நான் கற்றுக்கொண்ட திரைப்பட மொழியின் மூலம் இயக்குநர் என்ற முறையில் உலகத்திற்கு உணர்த்த வேண்டும் எனக் கருதி ‘நீலம்’ என்னும் பெயரில் இப்படத்தை இயக்கியுள்ளேன். என்னுடைய இனத்தின் வலியை இப்படத்தின் வழியே உலகத் தாரின் பார்வைக்குக் கொண்டு சென்றிருக்கின்றேன்.

 என்னுடைய இந்த முயற்சிக்கு ஒத்துழைப்புக் கொடுத்து முழுச் செலவையும் செந்தூரன் ஏற்றுக் கொண்டார். ஒளி ஓவியர் தங்கர்பச்சான் ஒளிப்பதிவு செய்து தந்தார். அவரது மகன் அர்விந்த் பச்சான், நான் கதையைச் சொன்னபோது நன்றாக உள் வாங்கி சிறப்பாக நடித்தான். படத்தொகுப்புப் பணி யிலிருந்து ஒதுங்கியிருக்கும் பீ. லெனின், இப் படத்தின் படத்தொகுப்பைச் செய்து கொடுத்தார். புது இளைஞர் ந. நிரு பின்னணி இசையைச் செய்தார். இவர்களும், இன்னும் அனைத்துப் பணிகளையும் மேற்கொண்ட யாரும் பணம் வாங்கிக் கொள்ளவில்லை. அனைவரும் என் நன்றிக்குரியவர்கள். இது எனக்கான பெருமையல்ல. இத்தனை பேரின் ஒத்துழைப்போடு நடந்த கூட்டு முயற்சிக்கான வெற்றி” என்று ‘நீலம்’ உருவான உணர்வின் பின்னணியைச் சொன்னார் கவிஞர் அறிவுமதி.

arv1.jpg

 தமிழர்கள் தம் நெடும் வரலாற்றில் பதிவு செய்ததும் குறைவு; அவற்றைப் பாதுகாத்ததும் குறைவு. இழந்ததுதான் ஏராளம். வரலாற்றைச் சரியாய்ப் பதிவு செய்திருக்கும் இந்தப் படத்தில் அழுகிய பிணங்களோ, அழிந்து போன இழப்பு களோ இல்லை. இழந்து போன தமிழரின் வாழ்க்கை யும், எதிர்கால வாழ்வுக்கான போராட்டத்தையும் உணர்த்துவதாய் காட்சிகள் விரிகின்றன.“பெரியாரின் பிள்ளைகள் படமெடுக்க வந்தால் யாருக்காக எடுப்பார்கள்? எப்படி எடுப்பார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் இப்படம்” என்கிறார் அறிவுமதி.

 

தமிழர் வாழும் பகுதிகளிலெல்லாம் சென்று ஆழிப்பேரலை நிகழ்த்திய சோகத்தின் வலியை வெளிக்கொணரும் முயற்சி தான் இந்தப் படைப்பு, மொத் தமே 10 நிமிடங்கள் ஓடக்கூடிய நீலம் குறும்படத்தின் காட்சி இரைச்சலிடும் அலை கடலோடுதான் தொடங்குகிறது. தமிழரின் அடையாளமாய் ஒற்றைப் பனை மரத்தின் புலத்தில் விரிகிற கடற்கரை வெளியின் கால் சுவடுகள் நடுவில் அலைகிற சிறுவன். வாழ வைத்த கடல் வாழ்வைப் பறித்த கொடுமை மனிதனுக்கு மட்டும் நேரவில்லை. கடலையே வாழிடமாகக் கொண்ட மீனும் மடிந்து கிடப்பது இயற்கையல்ல. லட்சக்கணக்கானோர் மடிந்த சோகத்தை, உயிரற்ற மீனும் நண்டும் நமக்கு உணர்த்துகின்றன. நிகழ்ந்துவிட்ட பெருந்துயரத்தின் வலியை அவலக் காட்சிகளின்றி இப்படியும் விவரிக்க முடியுமா? இழப்பு நிரம்பிய விழிகளுடன் கடலை நோக்கும் சிறுவன் தாங்கள் விளையாடிய கடல் வேட்டையாடிச் சென்ற கோரத்தை நிகழ்த்தியது நீதானா என்னும் கேள்வியைத் தேக்கி நிற்கிறான். மீண்டும் கடலிலிருந்து வெளி வந்து தங்கள் வாழ்க்கையைத் தொடங்கி விளையாடிக் கொண்டிருக்கும் நண்டுகளைப் பார்த்தவன் அலைகளையொட்டி ஓடிச் சென்று தேடுகிறான். மணலில் நண்டைத் தேடி எடுத்து சிறுவன் கேட்கிற கேள்விகள் மொழி பேதமற்று யாவருக்கும் புரியும்.

“நீ தினமும் கடலுக்குள்ள போய் போய் தான வர்ற உள்ள போன எங்க அம்மாவைப் பாத்தியா? சொல்லு. ஏன் பதில் சொல்ல மாட்டேங்குற. நீயும் கடல் பெத்த புள்ளைதானே. எங்கம்மாவப் பாத்து வரச் சொல்லு” என்று விழிநீர் வழிய சிறுவன் கேட்கும் காட்சி உலுக்குகிறது. “சொல்லு, எங்கம்மாவப் பாத்தியா? நீ சொல்ல மாட்டியா?”


என்று அவன் வேண்டுகோள் வைக்க பதில்சொல்லத் தெரியாமல் நழுவி விழுந்து கடலுக்குள் போகிறது நண்டு. கடல் மணலைக் குவித்துத் தாயின் மடியாய் எண்ணி படுக்கும் சிறுவனை தொடத் தயங்குகிறது கடல் அலை. தான் நிகழ்த்திய கோரத்தால் உறவின்றித் தவிக்கும் சிறுவனுக்கு ஆறுதல் சொல்ல எண்ணிவரும் அலைகள் தயங்கித் தயங்கி அவனைத் தழுவும்போது அன்னையின் தாலாட்டாய் விரிகிறது பின்னணி இசை. கடலும் அன்னை தானே. சோகத்தை சுமந்து தொடங்கும் படம் நம்பிக்கையை விதைத்துவிட்டுச் செல்கிறது.என்ன சோகம் நிகழ்ந்தாலும் வாழ்வைத்தேடி மீண்டும் கடலுக்குள் தானே போகவேண்டும் என்று மீண்டும் தங்கள் வாழ்வைத் தொடங்கும் நண்டுகள், காற்றினூடே அலையும் வண்ணத்துப்பூச்சி, மெதுவாய் எழுந்து ஆறுதல் சொல்லும் கடலலைகள், கொடுக்கக் காத்திருக்கும் மனிதத்தைச் சொல்லும் கடற்கரை கால் தடங்கள் என்று நெஞ்சில் நம்பிக்கையை ஊன்றுகிறது படம்.படத்தின் பெரும் பலம் பின்னணி இசை. அறிமுகம் ‘நிரு’வுக்கு சிறப்புப் பாராட்டு.தங்கர்பச்சானின் ஒளிப்பதிவும், லெனினின் படத்தொகுப்புக்கு காட்சிகளை நகர்த்தவில்லை. அதன் போக்கில் தவழவிட்டிருக்கின்றன.

படத்தில் நடித்திருப்பது கடலும் சிறுவனும் மட்டும்தான். ஆனால் சிறுவன் நடிக்கவில்லை; வாழ்ந்துவிட்ட சிறுவன் இயக்குநர் தங்கர்பச்சானின் மகன் அர்விந்த் பச்சான். இவரின் நடிப்புத் திறனுக்குக் கிடைத்த மாபெரும் வாய்ப்பு இந்த கதாபாத்திரம்.

தான் கற்ற திரை மொழியை தமிழனுக்காய் வடித்திருக்கிறார் இயக்குநர் அறிவுமதி. கவித்துவமான இந்தப் படைப்பு சொல்லும் இவர் கவிஞர் அறிவுமதி என்று.

நன்றி : உண்மை

07
மே
08

நீலம் – குறும்படம்

09
ஏப்
08

அன்புள்ள ஞாநிக்கு…

அன்புள்ள ஞாநிக்கு…

… அறிவுமதி…..

.

அன்புள்ள ஞாநி! உங்கள் பழைய நண்பன் அறிவுமதி பேசுகிறேன். அவ்வப்போது நீங்கள் செய்கிற தவறுகளை அவ்வப்போது நட்புரீதியாகவே சுட்டிக்காட்டி இப்படியெல்லாம் எழுதுதல் நாகரிகமா? நியாயமா? என்று நேரிடையாகவே தங்களிடம் கேட்டிருக்கிறேன்.

 இனி அப்படியெல்லாம் எழுதமாட்டேன் என்று எனக்கு நீங்கள் சில வேளைகளில் உறுதிமொழியும் அளித்துள்ளீர்கள். அந்த நம்பிக்கையில் உங்களோடு உடன்பட்டு உங்கள் எழுத்துகளை உள்வாங்கி உளம் மகிழ்ந்த எங்களுக்கு…

 கொஞ்சகாலமாகவே… உங்கள் எழுத்துகளில் தென்படத் தொடங்கிய ‘நொரநொரப்பு’ உங்கள் சிந்தனைகளை உள்விழுங்க விடாமல் உபத்தரவம் செய்யத் தொடங்கியது.

 அப்போதே… விழித்துக் கொண்டு உங்கள் எழுத்துகளை உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கினோம்…

 சிவப்புடை போட்டுக் கொண்டு
பொதுவுடைமை முகாமுக்குள் போய்
உளவுபார்த்துவிட்டு
அவர்களிடம் பிடிபடாமல்
தப்பித்து வந்த நீங்கள்…
கருப்புடை போட்டுக் கொண்டு
பெரியாரிய முகாமுக்குள் போய்
உளவுபார்த்துவிட்டு
அவர்களிடம் பிடிபடாமல்
தப்பித்து வந்த நீங்கள்…
புலிகளின் சீருடை போட்டுக்கொண்டு
புலிகளின் முகாமுக்குள் போய்
உளவுபார்த்துவிட்டுத்
திரும்புகையில் பிடிபட்ட
ஒரு
கேடு கெட்ட
சிங்கள உளவாளியாய்
இப்போது எங்களிடம் நீங்கள்
கையும் களவுமாய்..
பொய்யும் பூணூலுமாய்..
அகப்பட்டிருக்கிறீர்கள்…

 

கொஞ்ச நாள்களுக்கு முன்பு உங்களிடமும் உங்கள் எழுத்துகளிடமும் கொஞ்சம் விழிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் எழுதிய கட்டுரையைப் படித்துவிட்டு… இப்படியெல்லாம் ஞாநியை சந்தேகப்படலாமா? என்று கேட்டு… என் கருத்துக்கு உடன்படாமல் உங்கள் பக்கம் நின்றவர்தான் எங்கள் சுப.வீ.

 தமிழ்த்தேசீய ‘தென்செய்தி’-யும் எங்கள் ஞாநி என்று தங்கள் கட்டுரையை அண்மையில் வெளியிட்டு மகிழ்ந்தது.

 பெரியார் திராவிடர் கழகமும், எங்கள் ஞாநி.. பெரியார் ஞாநி என்று.. பல மேடைகள் தந்து மகிழ்ந்தது.

ஆனால்… இவர்கள் அனைவரிடமும்.. சுப.வீ-க்கு தாங்கள் எழுதிய குமுதம் மடல்வாயிலாக…

 

நான்..
பெரியார் ஞாநியன்று..

பெரியவாள் ஞாநியே..

என்று வெளிப்படையாகத் தெரிவித்துக் கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி ஞாநி. திண்ணியத்திலும் எரையூரிலும் ஆதிக்க சாதிகள் செய்த அட்டூழியங்களை அதட்டிக் கேட்டவர்கள்தாம் ஞாநி.. அந்தச் சிங்கள இயக்குநரையும் தட்டிக்கேட்டவர்கள். அவர்களில் ஒருவர்தான் சுப.வீ. அவரை மட்டும் தனிமைப் படுத்தி.. அவரைத் தலித்துகளுக்கு எதிரானவராகக் காட்டி…

 “மொழியால்… இனத்தால் நம்மவரான விடுதலைப்புலிகள்” என்று.. எமது மொழிக்குள்… எமது இனத்திற்குள் உள் நுழைய.. உள் பதுங்க வருகிற உங்கள் சூழ்ச்சியை.. என்னவென்று சொல்வது?!

 

மொழியால் எப்படி நீ
தமிழனாவாய்?
இனத்தால் எப்படி நீ
தமிழனாவாய்?
‘நம்மவர்’ என்கிற சொல்லாடலுக்குள்
தமிழர்களாகிய எங்கள் பெயர்கள் அடங்கலாம். ஞாநி என்கிற உன் பெயர் எப்படி அடங்கும்.

 

நீ யார்…
எங்கள் தமிழர்களை எழுப்பிவிட
நாங்கள் படாதபாடு
பட்டுக்கொண்டிருக்கையில்…
எழுகிற தமிழர்களை இடறிவிட
முயற்சி செய்கிற.. நீ யார்?
பச்சைப் பார்ப்பான்!

 

அப்புறம் எப்படி…நீ…தமிழன் பட்டியலில்.. சேர முடியும்? ‘நம்மவர்’ என்ற சொல்லாடலுக்குள் நுழைய முடியும்?
ஒரே ஒரு இரட்டை டம்ளர் டீக்கடையையாவது… என்று கேட்டிருக்கிறீர்களே ஞாநி! பல இரட்டை டம்ளர் டீக்கடைகளை அடித்து நொறுக்கி.. ஆதிக்க சாதித் திமிரை ஓடஓட விரட்டிய எம் பெரியார் பிள்ளைகள் தாமய்யா அங்கு வந்து… எங்கள் இனவரலாற்றை இப்படி இழிவு செய்யலாமா என்று எதிர்த்துக் கேட்டது! தனித்த சுப.வீ மட்டும் இல்லை.

சிறுபான்மை பிரிவினரைக் குறித்து ரொம்பவும் அக்கறையாக கவலைப்பட்டு இருக்கிறீர்கள். அந்தச் சிறுபான்மை பிரிவில் பிறந்து மிகச் சிறந்த இடத்திற்கு வந்த அய்யா அப்துல் கலாம் பற்றி எவ்வளவு கேவலமாக எவ்வளவு இழிவாக நீங்கள் எழுதி இருக்கிறீர்கள் என்பதை மறுக்க முடியுமா ஞாநி!
“மாற்றாக தம்பி சீமானுடன் சேர்ந்து பதில் படம் எடுங்கள்….” எவ்வளவு எளிதாக எழுதிவிட்டீர்கள் ஞாநி!

“காற்றுக்கென்ன வேலி” எடுத்த தம்பி புகழேந்தி பட்டபாடு தெரியாதா ஞாநி!
இந்தச் சிங்கள இயக்குநருக்காக இவ்வளவு வரிந்து கட்டிக்கொண்டு வருகிற உங்களை… அன்றைய பட்டினிப் போராட்டங்களில் எல்லாம் எங்களால் பார்க்க முடியவில்லையே ஞாநி!
ஈழப் பிரச்சனை குறித்துத் திரிபுபடுத்தித் திரைப்படமெடுத்த பார்ப்பன இயக்குநருக்கு தேசிய விருது. அதை குறித்து வெறும் மேடையில் பேசிய தமிழர்களுக்கு 19 மாத பொடா சிறை தண்டனை…

 அந்தத் தண்டனையை அனுபவித்தவர்களில் சுப.வீ-யும் ஒருவர். அவரைப் போய் அதே போல கொதிக்காதது ஏன் என்று எகத்தாளமாக கேள்வி கேட்கிறீர்கள்? எத்தனை முறை சுப.வீ சிறைக்குச் சென்றுள்ளார். எந்தெந்தப் பிரச்சனைகளுக்காகச் சிறைக்குச் சென்றுள்ளார் என்கிற பட்டியலை வேண்டுமானாலும் தரத் தயாராக இருக்கிறோம் ஞாநி! அவரைப் போய் கொதிக்காத ஆள் என்று கொழுப்பாக எழுதுதல் பிழையில்லையா ஞாநி!

 பொடா கொடுமை பற்றி சுப.வீ எழுதிய வலி சுமந்த தொடரை.. தொடரவிடாமல் தடுத்த நீங்களா ஞாநி, கருத்துரிமை பற்றி பேசுவது?

 “என் கருத்துகளை… எல்லோரும் பயன்படுத்தலாம், குமுதம் குழுமம் மட்டும் பயன்படுத்தக் கூடாது” என்று கூறிய நீங்களா ஞாநி, கருத்துரிமை பற்றி பேசுவது?

 “பத்திரிகையில்,தொலைக்காட்சியில்,ஊடகங்களில், அவ்வளவு ஏன் உங்கள் சகோதரர் எஸ்.பி.முத்துராமன் உட்பட, தமிழ்த்திரைப்படப் படைப்பாளிகள் சினிமாவில் சொல்லாமல்விட்ட பெண்ணடிமைக் கருத்துகள் ஏதும் மீதம் இருக்க முடியாதே!” என்று எழுதியுள்ளீர்களே ஞாநி!

 தாங்கள்.. தங்கள் முற்போக்கான கருத்துகளைத் தங்கள் வலைத்தளத்தில் எழுதுவது, ‘தீம்தரிகிட’ என்கிற தங்களுக்கான இதழில் மட்டுமே எழுதுவது என்ற பத்தியத்தோடுதான் இருக்கிறீர்களா ஞாநி!

 

நன்றி ஞாநி..

 

எந்தச் சூழ்நிலையிலும்..
நாம் கருத்துக்குக் கருத்து வைத்து..
தெளிவுகளை நோக்கி
விவாதிப்போம்… மற்றபடி உங்கள்மீது எங்களுக்கு எவ்வித வன்மமும் இல்லை.

 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக.. உங்களை உழைக்கவிடாமல் உட்காரவைத்துச் சோறு போட்ட.. போடுகிற.. சமூகம் தமிழ்ச் சமூகம். அந்தச் சமூகத்திற்கு சிறிதும் நன்றியில்லாமல் நீங்கள் செய்கிற இந்த ஈனக் காரியங்கள் குறித்து உங்களுக்கு வெட்கமே இல்லாமல் போயிற்றே! அது தான் ஞாநி வருத்தமாக இருக்கிறது!
சிங்கள இயக்குநருகாக வன்முறை என்று வரிந்து கட்டிக்கொண்டு வருகிற நீங்கள்…
தில்லை நடராசர் கோயிலில்.. ஆறுமுக சுவாமி அவர்களை, தீட்சிதர்கள் அடித்து நொறுக்கிய போது.. வன்முறை என்று வாயைத் திறக்கவில்லையே.. ஏன் ஞாநி?

 

கடைசியாக சொல்லிக் கொள்வது இது தான் ஞாநி!

 

எங்கள் வீட்டுக்குள் எங்கள் பெண்களைக் கெடுக்க வருகிற மிருகங்களின் ஆண்குறிகளை வெட்ட வேண்டும் என்பது எங்களின் ஆத்திரம் !

இல்லை.. இல்லை…

அந்தக் குறிகளுக்கு ஆணுறைகள் மாட்டிவிட வேண்டும் என்பது உங்களின் சாத்திரம்.

நீங்கள்.. உங்கள் சாத்திரப்படியே மாட்டி விட்டுக் கொள்ளுங்கள் ஞாநி!
எங்களால் முடியாது!

நன்றிகளுடன்….
அறிவுமதி

சென்னை
08-ஏப்ரல்-2008

நன்றி : உலகத் தமிழ் மக்கள் அரங்கம்

03
ஏப்
08

நீரோட்ட‌ம்!

நீரோட்ட‌ம்!

—-அறிவும‌தி—-

கர்நாடகாவிலும்
இந்து!தமிழ் நாட்டிலும்
இந்து!

இந்துக்கு இந்து
குடிநீர் த‌ர‌மாட்டாயா

இதுதானா இந்துத்துவா
உங்க‌ள்
தேசிய‌
நீரோட்ட‌ம்!

02
ஏப்
08

செம்மொழி‍ – காரணப் பெயர்

—-அறிவும‌தி—-

செல்லும் இடமெல்லாம்
செருப்படி
வாங்கி
சிவப்பாய் குருதி வழியும்
உதடுகளால்
பேசப் படுவதால்!

02
ஏப்
08

பிழைக்கும் வழி

—–அறிவும‌தி—–

.

மொன்னைத் தமிழனே!
முதலில் அன்னைத்
தமிழை
அறவே
மற! மற!

பிழைக்க வேண்டுமா?
ஆங்கிலம்கற்றுக் கொள்!

அது போதுமா என்றா
கேட்கிறாய்!
போதும்!
போதும்!
அது மட்டும்
போதும்!

ஆனால்
உயிர்
பிழைக்க வேண்டுமா?

மும்பை என்றால்
மராத்தி
கற்றுக் கொள்!

கர்நாடகம் என்றால்
கன்னடம்
கற்றுக் கொள்!

கொழும்பு என்றால்
சிங்களம்
கற்றுக் கொள்!

19
மார்ச்
08

நட்புக்காலம்

11.jpg

தொடர்ந்து படிக்கவும். ‘நட்புக்காலம்’

12
மார்ச்
08

73, அபிபுல்லா சாலை: கலை வளர்க்கும் முகவரி

கவிஞர் அறிவுமதியின் அலுவலக முகவரிதான் இன்று கோடம்பாக்கம் கொண்டாடும் கலைஞர்கள் பலரின் முதல் வரியுமாக இருக்கிறது.

சுந்தர்.சி, செல்வபாரதி, சீமான், பாலா, பழநிபாரதி, நா.முத்துக்குமார், நந்தலாலா, யுகபாரதி, கபிலன், தபூசங்கர், அஜயன்பாலா, ஜெயா, சரவணன், நெல்லை ஜெயந்தா வரை அறிவுமதியின் கவிக்கூடத் தில் வளர்ந்தவர்கள் ஏராளம்.

‘உள்ளேன் ஐயா’ என்று ஒரு படம் எடுக்க விரும்பி ஆரம்பிக்கப்பட்ட அலுவலகம்தான், இன்றைக்கும் எங்கெங்கிருந்தோ வண்ணக் கனவுகளுடன் சென்னை வந்தடைகிற இளைஞர்களின் தாய்க் குடில்.

all.jpg

”கனவுகளும் ஆசைகளும்தான் மனதில் இருக்கும். கையில் ஒரு பைசாகூட இருக்காது. இந்த நகரத்தில் வறுமையோடு வாழ நான் கற்றுக்கொண்டது அறிவுமதி அண்ணனிடம்தான். கையில் கொஞ்சம் பணம் இருந்தால், திமிராக நடக்கத் தோன் றும். காசே இல்லாவிட்டால் சோர்ந்து போய் எங்காவது முடங்கத் தோன்றும். ஆனால், இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஒரே மாதிரி வாழ்க்கையை எதிர்கொள்கிற தைரியத்தைக் கற்றுக்கொண்டது அவரிடம் தான். ஒரு நாள், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்துக்கு அழைத்துப் போனார். குளிப் பதற்காகக் காவிரி ஆற்றுக்குப் போனோம். நான் சோர்ந்து போய் காவிரிக் கரையில் தூங்கிவிட்டேன். எழுந்து பார்த்த போது, அழுக்கான என் சட்டையை எடுத்துத் துவைத்து, அது காய்வதற்காகக் காத்திருந்தார். அண்ணன் எனக்கு அம்மாவுமான தருணம் அது!” என்கிறார் இயக்குநர் சீமான்.

”பழ.பாரதி என்கிற என் பெயரை பழநிபாரதி என மாற்றி வைத்தவர் அண்ணன்தான். என் முதல் கவிதைத் தொகுப்பான ‘நெருப்புப் பார்வைகள்’ புத்த கத்தை முழுக்கத் திருத்தி வடிவமைச்சது, என்னை ஒரு கவிஞனாக அங்கீகரித்து மேடை களில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது என எல்லாமே அவர்தான். ஒருவேளை, இந்த அபிபுல்லா சாலையில் உள்ள அறிவுமதி அண்ணனின் இந்த அலுவலகம் இல்லை என்றால், நானெல்லாம் வெளி உலகத்துக்கு அறியப்படாத கவிஞனாகத்தான் இருந்திருப்பேன். எனக்கு மட்டு மல்ல, ஊரிலிருந்து கிளம்பிவரு கிற யாரோ ஒரு முகம் தெரியா தமிழனுக்குக்கூட இதுதான் உண்மையான சரணாலயமாக இருக்கிறது. என்னைப் போல பலரும் இங்கு வந்து போவதால், நாங்கள் அறிவுமதி அண்ணனின் நிழலில் நண்பர்களானோம். கவிதையும் கற்பனையுமாகக் கழிந்த மிக நீண்ட இரவுகள் அவை. செல்வபாரதி அப்போது எங்களுடன்தான் இருந்தார். அவரைப் பார்க்க சுந்தர்.சி வரு வார். நான் ‘புதிய மன்னர்கள்’ படத்தில் பாடல் எழுதியிருந்தேன். அதைக் கேட்டுவிட்டு, ‘எனது அடுத்த படத்துக்கு எல்லா பாடல்களையும் நீ எழுது’ என்று சுந்தர்.சி தந்ததுதான் ‘உள்ளத்தை அள்ளித் தா’. அந்தப் படத்தின் அத்தனை பாடல்களையும் அண்ணனின் அறையிலிருந்தே எழுதினேன். எனக்குத் திருப்பு முனையாக அமைந்தது அந்தப் படம்தான்!” என்கிறார் பழநிபாரதி.

”கணிதம் படித்த என்னை கவிதை எழுதத் தூண்டியதும், உதவி இயக்குநராக என்னைச் சேர்த்துவிட்டதும், ஆறு வருடம் என்னைத் தங்கவைத்துப் பாது காத்ததும் அண்ணன்தான். காதல் கவிதைகளில் எனக்கென ஓர் இடத்தைப் பிடித்ததில் என்னைவிடப் பெரிதான சந்தோஷம் அண்ணனுக்குதான். போட்டிகள் நிறைந்த இந்த வெப்பத்தைத் தாங்கும் நிழலாக, எனக்கு அண்ணன் இருக்கிறார்” என்கிறார் தபூசங்கர்.

”சினிமாவில் உதவி இயக்கு நராகச் சேர வேண்டும் என்கிற வேட்கையில்தான் சென்னைக்கு வந்தேன். என்னைப் பாடல் எழுதச் சொல்லி, திசை திருப்பி யது அண்ணன். இசைக்குப் பாடல் எழுதுவதற்குப் பயிற்சி எடுத்துக்கொண்டதும் இந்த அறையில்தான். என் முதல் கவிதைத் தொகுப்பான ‘பட்டாம் பூச்சி விற்பவன்’ புத்தகத்தை, அண்ணன் தன் ‘சாரல் வெளியீடு’ மூலமாகக் கொண்டுவந்தார். என்னை பாலுமகேந்திரா சாரிடம் உதவியாளராகச் சேர்த்துவிட் டார். அந்த அறைதான் எங்களுக்குச் சுவாசம் மாதிரி இருந்தது. ‘என்னைச் சந்திக்க கனவில் வராதே’ என்ற ஜப்பானியக் காதல் கவிதைகளின் மொழிபெயர்ப்பு நூலுக்கு, ‘சமர்ப்பணம் 73, அபிபுல்லா சாலை’ என்று எழுதியதும் அந்த நன்றியில்தான்” என்று சிலாகிக்கிறார் நா.முத்துக்குமார்.

இப்படி, அறிவுமதி வழிகாட்டிய கவிஞர் களெல்லாம் இன்று சினிமாவில் கொண் டாடப்படும் கவிஞர்களாகவும் கலைஞர் களாகவும் இருக்கிறார்கள். ஆனால் அறிவுமதியோ, இரண்டு வருடங்களுக்கு முன்பே, ‘இனி திரைப்படங்களில் பாடல் கள் எழுத மாட்டேன்’ என அறிவித்து விட்டார்.

”’உள்ளேன் ஐயா’ என்ற படத்துக்காகத் தான் புதுவை அற்புதம் எனக்கு இந்த அலுவலகத்தைப் போட்டுக்கொடுத்தார். இன்றுவரை அது தொடர்கிறது. ஒரு கவியரங்கத்தில் என் கவிதை களைக் கேட்ட பெரியவர் கவிஞர் மீரா அவர்கள், என்னை தமிழ் ஆசான் கவிக்கோ அப்துல் ரகுமானுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இந்த அறிவுமதியைக் கவிதையில் வளர்த்தது அவர்தான். எனக்கு ஓர் அப்துல் ரகுமான் கிடைத்த மாதிரி இந்த கிராமத்து இளைஞர்களுக்கு நாம் இருக்க வேண்டும் என நினைத்தேன். அதைத்தான் இன்றுவரை செய்து வருகிறேன்.

சுந்தர்.சி., சீமான், செல்வபாரதி ஆகிய மூவரும் ஒரே காலகட்டத்தில் இந்த அறைக்கு வந்தார்கள். அப்படி வந்த தம்பி களில் முதலில் திரையில் வெளிச்சத்துக்கு வந்து, ஒரு இயக்குநராக வெற்றியடைந்து, தபூசங்கர், பழநிபாரதி, செல்வபாரதி என நிறைய தம்பிகளுக்கு வெளிச்சம் கொடுத்தது சுந்தர்தான். யுகபாரதி பாடல் கள் எழுதிக்கொண்டு இருந்த சமயத்தில் தான் இங்கு வந்து சேர்ந்தான். வார்த்தை களை ஒரு நேர்க்கோட்டில் கொண்டு வரும் வித்தையைக் கற்றிருக்கிறான். கபிலன் புதிய புதிய விஷயங்களைப் பாடல்களாக்குவதற்குக் கற்றிருக்கிறான். நா.முத்துக்குமார் சங்க இலக்கியங்கள் முதல் நவீன இலக்கியங்கள் வரையில் பரிச்சயமுள்ள, அதை எளிய தமிழில் பாடல்களில் கொண்டு வரும் வித்தையைக் கற்றவன்.

பாலா மதுரையிலிருந்து வந்த நேரத்தில், என்னிடம் ஒரு நண்பர் அறிமுகப்படுத் தினார். அப்போது பாலாவும் பொன் வண்ணனும் ஒரே அறையில் தங்கியிருந் தார்கள். ‘வீடு’ படப்பிடிப்பு நடந்துகொண்டு இருந்தது. அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் பாலாவின் அறைக்குச் சென்று எழுப்பி, ‘வீடு’ படப்பிடிப்புக்கு அழைத் துச் செல்வேன். அந்தப் படம் முழுவதுமே படப்பிடிப்பை அருகிலிருந்து பார்த்துப் பணி யாற்றினான். அந்தப் படம் முடிந்ததும் பாலுமகேந்திரா, ‘இன்னொரு உதவியாளர் வேண் டும். யாராவது இருக்கிறார்களா?’ என்று கேட்டார். பாலாவைச் சொன்னேன். ‘யாரிடம் பணி யாற்றியிருக்கிறான்?’ என்றார். ‘உங்களிடம்தான். உங்களுக்குத் தெரியாமலேயே!’ என்று சொல்லிச் சேர்த்துவிட்டேன். ‘சேது’ கதையை என்னிடம் முதலில் சொல்லும்போதே என்னை அழவைத்தவன் பாலா.

அஜயன் பாலா ஒரு சிறுகதை ஆசிரியராகத்தான் என்னிடம் வந்தான். பின்பு அவனது உலக சினிமாக்களின் பரிச்சயம் என்னைப் பிரமிக்கவைத்தது. நந்தலாலா, சந்தங்களுடன் பாடல்கள் எழுதுவதில் சிறப்பானவன்.

சென்னைக்கு வந்த இத்தனை வருடங்களில் இத்தனைப் பாசமுள்ள இளைஞர்களை என் தம்பிகளாகச் சம்பாதித்திருக்கிறேன் என்பதை நினைக் கும்போது பெருமிதமாக இருக்கிறது” என்கிறார் கவிஞர் அறிவுமதி.

கலை வளர்க்கும் கம்பீரத் தோடு நிற்கிறது 73ம் எண் கட்டடம்!

நன்றி: ஆனந்த விகடன்

01
மார்ச்
08

“தமிழ்க்காற்று” அறிவுமதி

‘கலை, கவிதை எல்லாம் இருக்கட்டும். உலகின் எந்த நிலப் பரப்பிலிருக்கும் தமிழனுக்கும் ஒரு துயரென்றால் பொறுக்காத மனமுடையவர். பேசுவது, எழுதுவது என்று நிறுத்திக் கொள்ளாமல், களத்தில் இறங்கி இயங்குபவர். இளைஞர்கள் தமிழ் எழுத வருகிறார்கள் என்றால், தனக்கு வருகிற சந்தர்ப்பங்களையும் தாரை வார்த்துக் கொடுக்கிறவர். எப்போதும் நான்கு ‘தம்பி’களோடே இருப்பதால் சிந்தனையில் மார்க்கண்டேயர்… அவர்தான் அறிவுமதி. தான் ‘பாட்டாளி’ ஆன கதையை இங்கே பகிர்ந்து கொள்கிறார்…”பட்டிக்காட்டுப் பையனான என்னை, திரைப்பட வாசலுக்கு அழைத்துச் சென்றவர்கள் – பூவை செங்குட்டுவன், என் நினைவில் வாழும் நண்பர் -இயக்குநர் தசரதன் ஆகியோர். அந்த அல்லிநகரத்து அழகுக் கறுப்பனின் ‘பதினாறு வயதினிலே’ படம் பார்த்த பிறகு, இயக்குநராக வேண்டும் என்ற ஆவல்தான் எனக்குள் உயர்ந்ததே தவிர, பாடலாசிரியராக வரவேண்டும் என்ற எண்ணம் நொங்குநீர் தடவிய வேர்க்குருவாய் தணிந்துவிட்டது. ‘கிழக்கே போகும் ரயில்’ திரைப் படத்துக்கு நான் எழுதிய கவிதை மடலைப் படித்து வியந்த இயக்குநர் பாரதிராசா தன்னுடன் பணியாற்ற அழைத்தார். அதே நேரத்தில் இயக்குநர் பாக்யராச் அவர்களும் தன்னுடன் பணியாற்ற அழைத்தார். நான் பாக்யராசிடம் சேர்ந்தேன். அவரிடமிருந்து வல்லபன், பாலுமகேந்திரா, பாரதிராசா என இயக்குநர் பயிற்சி நீண்டது.

எனது இயக்குநர் பாலுமகேந்திரா தெலுங்கில் இயக்கிய ‘நிரீக்சனா’வை எனது நண்பர்கள் இரகுபதிரமணன், பாபு ஆகியோர் ‘கண்ணே கலைமானே’ என்று தமிழில் செய்தபோது, அதில் பாடல்கள் எழுத வற்புறுத்தினார்கள்.

‘தாலாட்டே! நீ தூங்கிப்போக நான் தாயானேன்!
நாள்காட்டித் தாள் தேங்கிப்போக நான் நீயானேன்!’என இசைஞானி இளையராசா இசையில் எழுதிய அந்தப் பாடல்களை மறக்க முடியாது.

அப்புறம்… ‘அன்னை வயல்’ திரைப்படத்தில் என் பொன்வண்ணன் எழுதச் செய்த இரு பாடல்கள். சிற்பியின் இசையில்…


‘பூவே! வண்ணப் பூவே! கிழக்கே பொட்டு வைத்தாயே!’ என்று என் திரைப்பயணம் துவங்கியது.

‘கிழக்குச் சீமையிலே’ திரைப் படத்தில் பணியாற்றுகிறபோது என்மீது நம்பிக்கை வைத்த அண்ணன் தாணு அவர்கள், ‘பிரியதர்சன் இயக்கும் ‘சிறைச் சாலை’ திரைப்படத்துக்கான உரையாடல்.. பாடல்கள் அறிவுமதி’ என்று அறிவிக்கப் போகிறேன். என்ன சொல்கிறாய்?’ என்றார். ‘சரி’ என்றேன்.

திரைத்துறையில் எனக்கு ‘விடுதலை’ பெற்றுத் தந்தது ‘சிறைச்சாலை’.

‘மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ,
இன்று எந்தன் சூரியன் பாலையில் தூங்குமோ,
கனவு கொடுத்த நீயே என் உறக்கம் வாங்கலாமோ,
கவிதை விழிக்கும் நேரம் நீ உறங்கப் போகலாமோ..
ஆசை அகத்திணையா.. வார்த்தை கலித்தொகையா..
அன்பே நீ வா! வா! காதல் குறுந்தொகையா,

என அகத்துறைப் பாடல்களில் மட்டுமல்லாமல், விடுதலைப் போராட்ட வீரர்கள் பாடுவதாக அமைந்த..

‘வீரத்தைக் குண்டுகள் துளைக்காது!
வீரனைச் சரித்திரம் புதைக்காது!
நாட்டை நினைக்கும் நெஞ்சங்கள் வாடகை மூச்சில் வாழாது!
இழந்த உயிர்களோ கணக்கில்லை!
இருமிச் சாவதில் சிறப்பில்லை!
இன்னும் என்னடா விளையாட்டு
எதிரி நரம்பிலே கொடியேற்று!

என்கிற புறப்பாடலிலும் இலக்கியச் செழுமையுடன் தமிழ் செய்ய வாய்ப்புத் தந்தவர் அண்ணன் தாணு அவர்கள்தான்.

முதன்முதலில் இசைஞானி இளையராசா அவர்களோடு நேரிடையாக அமர்ந்து எழுதிய பாடல். ‘இராமன் அப்துல்லா’ படத்தில் இடம்பெற்ற ‘முத்தமிழே! முத்தமிழே!’ பாடல்தான். அதில் வரும் காதல் வழிச் சாலையிலே வேகத்தடை ஏதுமில்லை! நாணக்குடை நீ பிடித்தும் வேர்வரைக்கும் சாரல்மழை! என்கிற வரிகளை இசைஞானியும் பாலு மகேந்திராவும் தாய்மையுடன் பாராட்டினார்கள்.

‘தேவதை’யில் நண்பர் நாசருக்காக நான் எழுதிய பாடல்…

‘தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம்
மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபம் அது காலங்காலமாய் காதல் கவிதைகள் பேசுமே’தீப ஒளியில் சூழலே பிரகாசிக்க அதி அற்புதமாக அந்தப் பாடலைப் படம் பிடித்திருந்தார்கள். பிரமாண்டங்களைக் காட்டி வித்தைகள் பண்ணுகிறவர்களுக்கு மத்தியில் எளிமையின் அழகால் சிறப்புச் சேர்த்திருந்தார் ராசா.

அதேபோல, ‘சேது’. என் தம்பி பாலாவின் முதல் படம். மனதின் வலியை அத்தனை உக்கிரமாக நான் அதுவரை உணர்ந்ததில்லை. காதலை இளமையின் கொண்டாட்டமாகவே பார்க்கத் தருகிற தமிழ்த் திரைப்பட உலகில் அதன் மறுபக்கத்தை, ஆன்மாவின் அலறலோடு அள்ளிக்கொண்டு வந்த பாலாவின் படத்தில்…

‘எங்கே செல்லும் இந்தப் பாதை யாரோ… யாரோ… அறிவார்’

பாடலை மறக்க முடியுமா? அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தந்த தமிழும், வாணியம்பாடியில் அப்துல் ரகுமான் அவர்கள் தந்த தமிழும்தாம் என்னுடைய பாடல்களில் இலக்கிய அழகுகள் ஒளிரப் பயன்படுகின்றன என்பதை இங்கே நான் நெகிழ்ந்த நன்றியில் பதிவுசெய்ய வேண்டும்.

‘பிரிவொன்றைச் சந்தித்தேன் முதல் முதல் நேற்று!
நுரையீரல் தீண்டாமல் திரும்புவது காற்று!

ஒருவரி நீ ஒருவரி நான்
திருக்குறள் நாம் அன்பே! அன்பே!
தனித்தனியே பிரித்து வைத்தால்
பொருள் தருமோ கவிதை இங்கே?’

‘பிரியாத வரம் வேண்டும்’ திரைப் படத்துக்காக எழுதிச் சென்றிருந்த இந்த வரிகளைப் படித்ததும் இசையமைப்பாளர் இராச்குமார் உணர்ச்சிவசப்பட்டுத் தனது விரலில் அணிந்திருந்த மோதிரத்தைக் கழற்றி எழுந்து நின்று என் விரலில் அணிவித்தார். ‘நான் தங்கம் அணிவதில்லை’ என்றேன். ‘இது உங்களுக்கில்லை.. தமிழுக்கு’ என்று கூறி கட்டியணைத்துக்கொண்டார்.

‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ பாடல் பதிவுகளின்போது இசைப் புயல் ஏ.ர். ரகுமான் அவர்களிடம் அண்ணன் தாணு அவர்கள் என்னைப் பற்றிக் கூறியிருக்கிறார். அதை நினைவில் வைத்து இயக்குநர் அழகம்பெருமாளிடம் சொல்லி ‘உதயா’ திரைப்படத்துக்காக ஒரு மெட்டு தந்து எழுதிக்கொண்டு வரும்படி கூறியிருந்தார். அது ஒரு மண விழாப் பாட்டு.

பனிக்குகையின் உச்சியிலிருந்து பனித்துளிகள் சொட்டிச் சொட்டி பனிச் சிற்பங்கள் உருவாக்குவதுபோல் அவர் உருவாக்கிய ‘புது வெள்ளைமழை… என் மேல் விழுந்த மழைத்துளியே… மார்கழிப் பூவே…’ போன்ற உயிரைப் பிழியும் மெல்லிய பாடல்களில் எனக்குப் பெருவிருப்பம். எனவே, அவரோடு இணைகிற முதல் பாடல் அத்தகைய மெல்லிய மெட்டாக இருந்தால் நலமாக இருக்கும் என்று கூறி இந்த மெட்டைத் திருப்பித் தந்துவிட்டேன். அதற்காக எதுவும் நினைக்காமல்.. ‘அப்படியா கூறினார்… அப்படியானால் அப்படியொரு பாடலை அவரை எழுதச் சொல்லுங்கள்.. பயன்படுத்துகிறேன்’ என்று சொல்லியனுப்பினார்.

‘அழவைப்பேன் உன்னை அன்பே!
என்னைக் கிள்ளி!
விழ வைப்பேன் உன்னை அன்பே!
என்னைத் தள்ளி
இதயம் திறந்து இறங்கிப் பார்த்தேன் நான் நான்
நான் துடிக்க மறந்து துள்ளிக் குதித்தாய் நீ நீ நீ
மழையைப் பிடித்து ஏறிப் பார்த்தேன்நான் நான் நான்
உயிரை உதறி உலரப்போட்டாய் நீ நீ நீ’

என்று நான் எழுதியனுப்பிய பாடலைப் படித்து மகிழ்ந்து, இன்னொரு மெட்டையும் தந்தனுப்பினார்.

‘ஊனே ஊனேஉருக்குறானே!
உயிரின்மீதே உயிரை வைத்துநசுக்குறானே!’என்ற இந்தப் பாடலுடன்தான் அவரை முதன்முதலாக அழகம் பெருமாளுடன் சந்தித்தேன். பாடலைப் படித்து மகிழ்ந்து, அன்றிரவே பாடகர்களை அழைத்துப் பதிவு செய்தார்.

‘தெனாலி’யிலும் உடனே வாய்ப்புத் தந்தார். ‘வல்லினம் மெல்லினம்இடையினம்நாணம் கூச்சலிடசிவந்தனம்’ இத்தகைய இலக்கிய அழகுகளை அவர் விரும்பிச் சுவைக்கிறார்.

சந்தம் நெருடாத, தமிழ்ச் சத்து குறையாத சொற்களுக்காகத் தாகம் வளர்த்துத் தவிப்பவர் இசையமைப்பாளர் வித்யாசாகர்.

‘தோம் தோம்
தித்தித்தோம்
தொலைவிலிருந்தும்
சந்தித்தோம்
கண்ணால் கண்ணில் கற்பித்தோம்
காதல்பாடம் ஒப்பித்தோம்
தீண்டத் தீண்ட
தூண்டும்விரலைத்
திட்டிக்கொண்டே தித்தித்தோம்!’

என்ற பாடலை இயக்குநர் பிரசாத், எடுத்துப்போய் வித்யாசாகரிடம் தந்தார். அடுத்த அரை மணி நேரத்தில் பாடலுக்கான மெட்டு தயார்!

அடிப்படையில் நானொரு புலூசைக் காட்டுப் பிள்ளை. எனக்குள் அமெரிக்காவைத் திணிக்க நகரம் எவ்வளவோ முயற்சி செய்கிறது. ‘ஆங்கிலம் கலந்து பாடல் எழுதத் தெரியுமா?’ என்கிறது. ஊத்தாவுக்குள் சிக்கிய விறால்மீன் உள்நுழைந்து துழாவும் கைகளுக்கு அகப்படாமல் நழுவிப்போவதாய், நான் தப்பித்துக் கொண்டிருக்கிறேன். அம்மாவை விற்றுத்தானா பிள்ளைகளுக்குச் சோறு போட வேண்டும் என்கிற தவிப்பில் திமிறிக் கொண்டிருக்கிறேன்.இதற்கு நடுவிலும் என் புலூசைக் காட்டுத் தமிழையும் பாடல்களில் பயன்படுத்த வாய்ப்புத் தரும் இயக்குநர்களுக்கும் இசையமைப்பாளர்களுக்கும் எப்படி நன்றி சொல்ல!

நடவு நடும் பெண்கள் எல்லாம் அழுக்கு பாடல்கள் தவிர! இது ஒரு சப்பான் நாட்டு அய்க்கூ. இதுதான் உண்மை.ஆனால், அத்தகைய நடவுப் பாடல்கள் செழித்துக் கிடந்த வயல்களில் இன்று போய்ப் பார்க்கிறேன். மோழி பிடித்து, வரிசை கட்டி ஏர் உழுத இடத்தில்… இன்று ஒற்றை உழுவண்டி பேரிரைச்சலில் உழுதுகொண்டிருக்கிறது. இந்தப் பேரிரைச்சலுக்கு நடுவிலும் அந்த வண்டியிலிருந்து கேட்கிறது திரையிசைப் பாடல்!

பாடல்களைப் பாடியபடியே உழுதவர்கள், இன்று பாடல்களைக் கேட்டபடியே உழுகிறார்கள். பாடல்களைப் பாடியபடியே மாட்டு வண்டி ஓட்டியவர்கள், இன்று பாடல்களைக் கேட்டபடியே பேருந்துகள் ஓட்டுகிறார்கள். உற்பத்தியாளர்கள் நுகர்வாளர்களாக மாற்றப் பட்டுவிட்டார்கள். அள்ளி அள்ளி இலவசமாகத் தந்தவர்களின் மீது, ‘வாங்கிக் கொள்ளுங்கள்’ என்கிற வணிகச் சூழல் சுமத்தப்பட்டிருக்கும் காலத்தில் வாழலாச்சே!”

நன்றி : ஆனந்தவிகடன்




பக்கங்கள்

Blog Stats

  • 97,883 hits